சென்னை அடையாறில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துகளின் ஒரு பகுதியை கடந்த 1994ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்பவர் வாங்கினார்.
இந்நிலையில், அந்த சொத்துக்களை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேறு ஒரு நபருக்கு போலி ஆவணங்கள் மூலமாக விற்றதாக சிங்காரவேலன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு ஜனவரி 11ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்த்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், அஸ்வதி திருநாள் ராமவர்மா, மூலம் திருநாள் ராமவர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜு ஆகியோருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.