சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று (செப்.10) நடைபெற்றது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவரும் நடிகருமான நாசர் தலைமையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. உடன் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 23 செயற்குழு உறுப்பினர்களும், 3400 சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்காக ஏறத்தாழ ரூ.40 கோடி ரூபாய்க்கும் அருகே தேவைப்படும் நிலையில் அந்த பணத்தை திரட்டும் வழிமுறைகள் பற்றியும் பணத்தை திரட்ட நட்சத்திர விழா ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
பதவி முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்குள்ளாக நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் கார்த்தி, பூச்சி முருகன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “மிக சிறப்பாக 67ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூடிய விரைவில் எங்கள் கட்டடத்தில் இந்த கூட்டம் நடைபெறும். அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து உள்ளோம். அடுத்த ஓராண்டுக்குள் கண்டிப்பாக கட்டடம் கட்டப்படும் என நம்புகிறோம்” என்றனர்.
மேலும், “நிதி இல்லாத காரணத்தினால் தான் மருத்துவ வசதிகளை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.
இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்ததற்கு காரணம் எங்கள் மீது சங்கத்தினருக்கு உள்ள நம்பிக்கை தான். நாங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி விட்டோம், கடைசி கோரிக்கை கட்டடம் மட்டும் தான், அதையும் விரைவாக நிறைவேற்றுவோம்.
செயற்குழு விஷயத்தில், அனைவரது கருத்துக்களும் கேட்டுப் பெறப்பட்டது. சுதந்திரமான முறையில் இந்த கூட்டம் நடைபெற்றது. நிதி இல்லை என்றாலும் தனிப்பட்ட ரீதியில் எல்லோரும் மருத்துவ உதவிகளுக்காக சங்கத்திற்கு நிதியினை அளித்து, உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கே நாங்கள் ஒவ்வொருவரிடமும் நிதி உதவி கேட்டு, பெற்று தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இருக்கும் பணத்தில் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறோம்.
அடுத்த ஆண்டு இந்த விழாவை புதிய கட்டடத்தில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை, அதை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். அதேபோல சட்ட ரீதியில் உள்ள அனைத்து சிக்கல்களும் கலைக்கப்பட்டது. நிதி மட்டும் தான் எங்களுக்கான தடையாக உள்ளது. வேறு எந்த ஒரு தடையும் நடிகர் சங்க கட்டடம் கட்ட இல்லை. வங்கி கடன் நாற்பது கோடி என்ற அளவில் வாங்குவதற்கு எங்களுக்கு தகுதி இருக்கிறது. நடிகர்களுக்கு விபத்து ஏற்படக்கூடிய சமயத்தில் நாங்கள் அரசாங்கத்தை நாடி உதவி பெற்று தருகிறோம்” என்றனர்.
இதையும் படிங்க: "அரசியல் திறந்த கதவு... நடிகர் விஜய் அல்ல யார் வேண்டுமானாலும் வரலாம்" - நடிகர் வடிவேலு!