கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க, கண் மூக்கு தொண்டை நிபுணர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும், லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி. அதற்கான அடிப்படை தகுதி அவர்களுக்கு உள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரிகள் சேகரிக்க மறுப்பதன் மூலம், லேப் டெக்னீஷியன்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தவறுகின்றனர். லேப் டெக்னீஷியன் படிப்பில் மனித உடற்கூறியல் பகுதியும் உள்ளது. எனவே, அவர்கள் மாதிரிகளை எடுக்கத் தகுதியானவர்களே. கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் மட்டுமே மாதிரிகளை சேகரிக்க பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. தற்போது பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவே லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுகின்றனர்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவம் சாராத பணியாளர்கள், சுயநலமற்ற முறையில் பணியாற்றி வரும் நிலையில், லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (ஜூலை 2) ஒத்தி வைத்தது.