அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குட்டி பத்மினி, “திறமை கொண்ட ஏழை, எளிய மாணவ மாணவிகள் விளையாட்டுத்துறையில் முன்னேற வேண்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை குத்தகைக்கு எடுத்து பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை கடந்த 4 வருடங்களாக நடத்தி வந்தேன்.
இந்த நிறுவனத்தின் மூலம் வசதி படைத்தவர்களிடம் இருந்து பணம் பெற்று ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வந்தோம். அப்போது, சென்னை சைதாப்பேட்டையில் சென்னை மாநகராட்சியில் பயிற்சியாளராக இருந்த சந்தோஷ் கோபி மற்றும் சண்முக குமார் ஆகியோரும் என்னுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
அதன்பின், சில நாட்களில் இருவரும் சேர்ந்து எனக்கு தெரியாமல் ஸ்டூடண்ட் என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வழங்கப்படும் காசோலைகளை எனக்கு தெரியாமல் தனிப்பட்ட முறையில் சந்தோஷ் கோபி மற்றும் சண்முககுமார் ஆகியோர் பெற்று வந்துள்ளார். இதனால் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு இதுகுறித்து தெரியவந்த நிலையில் கணக்கு வழக்கை சரி பார்த்தபோது இருவரும் சேர்ந்து ரூ.90 லட்சம் வரை ஏமாற்றி இருப்பதை கண்டுபிடித்தேன்.
மேலும், நிறுவனத்தின் பெயரிலேயே போலியாக ரசீதுகளை அச்சிட்டு பயன்படுத்தியும் முறைகேடாக பணத்தை பெற்று வந்துள்ளனர். அதனை தொடர்ந்து நான் மைதானத்தை திவாகர் என்பவருக்கு கொடுத்த நிலையில், அவர்கள் நிறுவனத்தை நடத்த விடாமல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். அப்போது புகார் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் தரும்படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அனைத்து ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்” என்றார்.