இது தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் தேர்தலை சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது.வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தொகையை செலுத்துவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கொடுப்பேன், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவில் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச விலை வழங்குவேன்,விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் போன்ற வாக்குறுதிகளை நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.
மாறாக மக்களை நேரடியாக பாதித்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுத்து மக்கள் விரோத அரசாக பாஜக அரசு திகழ்ந்து வருகிறது.மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவதற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
இதற்காகத்தான் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் தமிழகத்தில்தான் அறிவிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.