சென்னை: மூத்த அரசியல்வாதியும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஈழத் தமிழர்களின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளிலிருந்தவர். நேற்று திடீரென ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். HISTORY OF THE TAMILS FROM THE EARLIEST TIMES TO 600 A.D, THIRUKKURAL AS THE BOOK OF THE WORLD, TRAILS OF TAMIRAPARANI, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் ஆளுநரிடம் வழங்கினேன். அதோடு அய்யன் வள்ளுவர் சிலையையும், தமிழக கிராமப்புறங்களில் கிடைக்கும் Aaranya Alli Aaranya Kudil அனுப்பித் தந்த கருங்காலிக் குச்சியையும் வழங்கினேன். கருங்காலி குச்சியின் சிறப்புகளை அவரிடம் சொல்லும்போது கவனத்தில் கொண்டார். பக்தி, இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், நவீனகால இலக்கியங்கள் பற்றியும் கூறினேன்" என்றார்.
மேலும், "திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், திரிகடுகம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், கார் நாற்பது, களவழி நாற்பது, புறநூனூறு மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்ப இராமாயணம் இவற்றைப்பற்றியெல்லாம் கலந்துரையாடினோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் கூத்துக்கள் அரசியல், இன்றைய தேர்தல்கள் (தேர்தல் கூத்துகளைச் சொல்லாமல் சொன்னேன்), அறமற்ற அரசியல் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள், திட்டங்கள், குறிப்பாக 16 முக்கிய நதிநீர்ச் சிக்கல்கள் போன்றவை பற்றியெல்லாம் ஆளுநரிடம் எடுத்துரைத்தேன். எங்கள் பகுதியான கோவில்பட்டி தனி மாவட்டமாக அமையத் தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையையும் முன் வைத்தேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பவாரியா கொள்ளையர்கள் புலி வேட்டை! வெள்ளை புலிகள் வேட்டையாடப்பட்டதா?