சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் (Erode by-election) மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும்(Congress to Contest in Erode East Bypoll), மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து இன்று ஆதரவு கேட்க உள்ளோம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி விலகக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜன.19) நடைபெற்றது. அப்போது, ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மேடையில் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதியைப் போல் செயல்படக்கூடாது. 'இந்து' மதத்தை பாரதிய ஜனதாவால் காப்பாற்ற முடியாது. அவர்களால் வெறியை உண்டாக்க முடியும், ஒரு குடும்பத்தை இரண்டாகப் பிரிக்க முடியும்.
பதுங்கும் ஆளுநர்: எல்லோரையும் ஒன்றாக இணைக்க ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவால் முடியாது. ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை; அவர்கள் பதுங்குகிறார்கள். வேறு ஏதாவது வேடம் போடலாமா? என நினைக்கின்றார்கள். அவர்களிடம் நல்ல சிந்தனை, நல்ல கருத்து, நல்ல தேசம் உருவாக்க வேண்டிய கருத்து என்பது இல்லை. நாங்கள் தோழர்கள், துரோகிகள் அல்ல.
இது கொள்கை ரீதியான போராட்டம்: எங்களுடைய கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி. எங்கள் அணியை மாபெரும் அணி தமிழ்நாட்டில் இல்லை. ஆளுநர் ரவியை வேஷம் கட்டி ஆடச்சொல்லி இருக்கிறார். அவரின் வேஷம் நேற்று வெளிச்சத்திற்கு வந்தது. நம்முடைய கொள்கை ரீதியான பரப்புரை மக்களிடம் ஆழமாக பதிந்தால், மதவாதிகள் அழிந்துபோவார்கள். இது கொள்கை ரீதியான போராட்டமே தவிர தனி மனிதப் போராட்டம் அல்ல.
தமிழ்நாடு மதவாதத்திற்கு எதிரானது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிறந்த முதலமைச்சராக இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிரமத்தைக் கொடுக்க வேண்டும், எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் ரவி அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதோ அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார். நாம் அதைக்குறை சொல்ல முடியாது. தமிழ்நாடு எப்போதும் மதவாதத்திற்கு எதிரானது தான்" எனத் தெரிவித்தார்.
சனாதனம்: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஆளுநர் திரும்பத் திரும்ப (sanatana) 'சனாதன தர்மம் - தமிழ் தர்மம்' என்று சொல்கிறார். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ் குழு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ? அது வெற்றி பெறவில்லை. அதனால், ஆளுநர் அதைத் திரும்பப்பெற்று இருக்கிறார்.
ஈரோடு எங்கள் தொகுதி; மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஈரோடு தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கேட்டு, மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று மாலை ஆதரவு கேட்க உள்ளேன்' எனக் கூறினார்.
இதில் அக்கட்சியின் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா,இமயா கக்கன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, தளபதி பாஸ்கர், மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்.? - ஜி.கே.வாசன்