50 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதையும் நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் பின்தங்கிய சமுதாய மாணவர்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.
கடந்த ஜுலை 27ஆம் தேதியன்று, மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு பிரதிநிதிகளும், தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலரும் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும், மூன்று மாதங்களில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசமைப்பு சட்டப்படியோ, வேறு சட்ட ரீதியான காரணங்களோ இதற்குத் தடையாக இல்லை என்றும் தெளிவாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் பலன்களை உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசு சரியாக நடத்தாத காரணத்தால் இன்று பாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியபடி குழுவை அமைக்கவோ, மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகச் சட்டம் இயற்றவோ எந்த முயற்சியையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு கிடைத்ததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம்" எனக் கூறினார்.