இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபகாலமாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையை அவமதிக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த மாதம் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய குற்றங்களை செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழ்ச் சமுதாய மக்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதியை தம் வாழ்நாள் முழுவதும் போராடி பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத சக்திகளால் ஏற்பட்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் வழியை பின்பற்றினால் இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது. வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் மதநல்லிணக்கம் சீர்குலைந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி கெடுவதற்கான சூழ்நிலையை தமிழ்நாடு பாஜக செய்து வருகிறது. இதை தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக, மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு ஒருபோதும் மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அனுமதிக்காது.
எனவே, தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது". அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.