சென்னை: ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய உத்தம்குமார் ரெட்டி, தேசிய சொத்துக்களை மோடி தலைமையிலான அரசு தனியாருக்கு வழங்கி வருகிறது என்றும், அதானி போன்ற தனி முதலாளிகளை வாழவைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
அதேபோல் அதானியை காப்பாற்றும் நோக்கில் மோடி அரசு மௌனமாக உள்ளது என மீண்டும் குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் காலத்தில் எந்த தனிநபரையும் உருவாக்கவில்லை என விளக்கம் அளித்தார். இதனையடுத்து பாஜகவை தவிர எந்த கட்சியும் அதானியை ஆதரிக்கவில்லை என கூறிய அவர், அதானி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கௌதம் அதானி சர்வதேச நிதி மோசடி செய்துள்ளதாகவும், வினோத் அதானி பனாமா தாள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும் புலனாய்வு அமைப்புகளை அதானி நிறவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் எனவும் உத்தம்குமார் குற்றம் சாட்டினார். அதேநேரம் மோடி அரசு எல்ஐசி நிறுவனத்தை நிர்பந்தப்படுத்தி, அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதில் செபி அமைப்பு, அதானி நிறுவன மோசடிகளை முன் கூட்டியே கண்டறிந்து மத்திய நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது என்றார். மேலும் 6 விமான நிலையங்களை அமைக்க அதானி நிறுவனத்திடமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், மோடி ஆட்சிக்கு முன் அதானி நிறுவனத்திடம் ஒரு துறைமுகம் மட்டுமே இருந்தது எனவும், தற்போது 13 துறைமுகங்கள் அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் பேசினார்.
இவை இந்தியாவின் 30 சதவீத துறைமுகங்கள் என கூறியவர், 40 சதவீதம் கண்டைனர்கள் இந்த துறைமுகத்தை கடந்து செல்வதாக தகவல் அளித்துள்ளார். மேலும் 2017ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் உத்தம்குமார் முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, மூன்று நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்ததாக தெரிவித்தார். மக்களை சிறை பிடித்ததாக அதிமுகவினர் இல்லாத குற்றச்சாட்டை பரப்புவதாக கூறிய அவர், தோல்வி பயத்தில் அதிமுக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் தொண்டர்களே அவர்களது கூட்டங்களுக்கு செல்லவில்லை என்று தெரிவித்தவர், அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதிமுகவால் தேர்தலை சந்திக்க முடியவில்லை எனவும், அதிமுகவின் நண்பர்களும் அவர்களது கட்சியினரும் பணியாற்ற தயாராக இல்லை எனவும் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அங்கு அமைச்சர்கள் பணியாற்றவில்லை என்றும் கூறியுள்ளார். அதேநேரம் அமைச்சர்கள் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தால்கூட, அவர்களது துறை இயங்கிக் கொண்டுதான் இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பணம் கொடுப்பதால் யாரும் வாக்கு செலுத்திவிட மாட்டார்கள் எனவும், மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும், எனவே நாம் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி பெற முடியும் எனவும் பேசினார். மேலும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு உள்ள பண பலத்தை விட வேறு யாருக்கும் கிடையாது என பகிரங்கமாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி, தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் அரசியல் தெரியும் எனவும் கூறினார்.
எனவே இந்த முறை ஈரோட்டில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது மக்கள் செல்வாக்கிலா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது கூட மக்கள் செல்வாக்காக இருக்கலாம் எனவும், அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, எடப்பாடி பழனிசாமி கேட்ட அதே கேள்வியை நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகிவிடும் என ஈபிஎஸ்சை கடுமையாக சாடினார். மேலும் கட்சியின் லட்சியத்தையும், கொள்கையையும்தான் பேச வேண்டும், ஆம்பளையா என்று கேள்வி கேட்கவா அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார்? என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது ராகுல் காந்தியோ எங்கேயாவது மண்டியிட்டு பார்த்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக எதை எழுதிக்கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது? - ஈரோட்டில் எடப்பாடி விளாசல்!