சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது. இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இரு கட்சிகளும் தங்களின் கூட்டணி குறித்த கலந்துரையாடல்களில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தெலங்கானாவில் வெற்றி பெற்றது. மீதம் மூன்று மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவானது அரசியல் வட்டாரங்களில் அதிகப்படியான பேசு பெருளாக மாறியது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று (டிச.30) நடிகர் விஜய் நிவாரண உதவிகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "உதவி செய்வது நல்லதுதான். அதில் தவறு ஒன்றும் இல்லை. நடிகர் விஜய் உதவி செய்துள்ளார், அவருக்கு வாழ்த்துகள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்பை விட பலமாகத்தான் இருக்கிறது. 4 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை விட காங்கிரஸ் 10 லட்சம் வாக்குகள் அதிகமாக வாங்கி உள்ளது.
குறிப்பாக, பாஜக பலமாக இருக்கின்ற வட மாநிலங்களில், அவர்களை விட காங்கிரஸ் கட்சி வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது. தேர்தலில் தோல்வி பெற்று இருந்தாலும், அதிக மக்கள் ராகுல் காந்தியைத்தான் ஆதரிக்கிறார்கள். எனவே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெரும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்த கேள்விக்கு, "டெல்லியில் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மிகச்சிறந்த தலைவர் விஜயகாந்த். ராகுல்காந்தி, விஜயகாந்த் மனைவி பிரமலதாவை தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்தார். மேலும், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்தார். விஜயகாந்த் தந்தை காங்கிரஸ் கட்சிக்காரர். அவரின் மறைவு எங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் அது வருத்தமே" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை அருகே கோர விபத்து: ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலி!