சென்னை: ஜனநாயக ரீதியாக நேர்மையான முறையில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் தி.நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அமமுகவைச் சேர்ந்த முன்னள் அமைச்சர் செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாடி கட்சி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் 2021 சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பல இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கும் மோசமான சூழல் நிலவியது.
இது நீடிக்கக் கூடாது. இனி வரும் காலங்களில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பணம் தரும் கலாச்சாரம் பெருந்தொற்றாக பரவியிருக்கிறது. வாக்காளர்களே அரசியல் கட்சிகளிடம் பணத்தை கேட்டுப்பெறும் சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல்களில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையங்கள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மே 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் உட்பட 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். எங்கள் வாக்கு விற்பனை இல்லை என்ற வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும்' -மத்திய கல்வி அமைச்சர் பதில்