சென்னை: ஜி. மோகன் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் சிறப்புக் காட்சியை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் பார்த்தனர்.
போதைப் பொருள் எதிர்ப்பு
இதையடுத்து செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் பேசியதாவது, "முதலில் மோகன் துணிச்சலைப் பாராட்டுகிறேன். அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே தலைவர் என்பதுபோல் இதுவரை கூறப்பட்டுவந்ததை இந்தப் படம் உடைத்தெறிந்துள்ளது. பட்டியலின மக்கள் நீதிக்கும், நியாயத்துக்கும் எப்படி துணை நிற்கிறார்கள் என்பதை வெகு சிறப்பாகக் காட்டியுள்ளனர். சாதி, மதத்தைத் தூண்டுகின்ற படம் இது அல்ல. போதைப் பொருள்கள் பழக்கத்திற்கு எதிராகப் படம் நிறையப் பேசுகிறது. அற்புதமான விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற படமாக இது இருக்கிறது. இந்தப் படத்தை வைத்து சாதி, மத மோதல்களைத் தூண்டலாம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்" என்றார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது, "பொதுவாக நான் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. திரைப்படங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், அது இளைஞர்களிடம் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்தும் கடந்த 20 ஆண்டுகளாக அதனை ஒரு இயக்கமாகவே செய்து வருகிறேன். இந்தப் படத்தில் மோகன் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிக அழுத்தமான கருத்தை கூறியிருக்கிறார். எனவே, இந்தப் படத்தைப் பாடமாக எடுத்துக்கொள்வது பாராட்டக்கூடிய விஷயம். அதில் பிசிஆர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, மதமாற்றம் தொடர்பான நடைபெற்றுவரும் சம்பவங்களைக் கூறியிருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: மனமாற்றம் இல்லாத மதமாற்றம் ஏமாற்றம்தான் - ஹெச்.ராஜா