சென்னை: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் கிருஷ்ண பொம்மைகள் பரவலாக விற்பனை ஆகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளை (செப்.6) கொண்டாடப்படுகிறது.
சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம் போன்ற மாநகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரூ.100 முதல் ரூ.8 ஆயிரம் வரை பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை தங்களுக்குப் பிடித்தவாறு பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
சென்னை மிண்ட் தெருவில், ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியர்கள் சிலர் மும்பை, குஜராத் பகுதியிலிருந்து பெரிய கிருஷ்ணர் சிலைகள் வைத்துச் சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். அதேபோல, சென்னையில் நாளை திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில், மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்பது, கிருஷ்ணர் தனது 8வது அவதாரமாகக் கிருஷ்ணர் அவதாரத்தில் அவதரித்து இல்லங்களுக்கு வருகை தந்து மக்களை அருள்பாலிப்பதே இதன் அம்சம் ஆகும். மேலும், இந்த கிருஷ்ணர் அவதாரம், மகாவிஷ்ணுவின் மிக முக்கிய அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில் மிக எளிமையாக, மக்களோடு மக்களாகக் கிருஷ்ணர் வாழ்ந்து, தனது புல்லாங்குழல் இசையால் அனைத்து உயிர்களுக்கும் கருணை அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அதேபோல மனிதன் முறையாக வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளை எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில், கருத்துகளுடன் கீதையாக எடுத்துரைப்பதும் இந்த அவதாரத்தில் தான் என அனைவரும் அறிந்ததே.
மேலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் சிறப்புப் பூஜைகள் செய்து சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபட்டால் கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். அதாவது, குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றக் கிருஷ்ணரை வழிபடலாம் என்று ஆன்மிகவாதிகளும், ஜோசியர்களும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. கண்ணன் மற்றும் ராதையாக உலா வந்த மழலையர்கள்!