கோழிக்கோடு: கேரளா மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திரூர் பகுதியை சேர்ந்தவர் சித்திக் வயது( 58). இவர் கோழிக்கோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் அவ்வப்போது வீட்டிற்குச் செல்லாமல் வாரக்கணக்கில் ஓட்டலில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த முறை அவ்வாறு தங்கி இருந்தவரின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததாலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததாலும் அவரது மகன் சந்தேகமடைந்து போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனை அடுத்து திரூர் காவல் நிலைய போலீசார் சித்திக் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சித்திக்கின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் இரண்டு முறை ஏடிஎம்மில் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணத்தை வந்து எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து அந்த நபர் யார் என போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையைத் துவங்கினர்.
இதனை அடுத்து சந்தேகப்படும்படியான ட்ராலி ஒன்று பாலக்காடு அருகே அட்டப்பாடி காட்டுப்பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது. அதனையடுத்து ட்ராலியை கைப்பற்றிய போலீசார் அதைத் திறந்து பார்த்தபோது கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் இருந்தது.
உடல் பாகங்களை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அப்போது ட்ராலில் இருந்த உடல் பாகங்கள் இறந்து 6 நாட்களுக்கு மேல் ஆன நபருடையது என தெரியவந்தது. இதனை அடுத்து கேரளா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்களின் பட்டியலை தயார் செய்த போலீசார் யாருடன் உடல்வாகு ஒத்துப் போவது என ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ட்ராலியில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் திரூரில் காணாமல் போன சித்திக் என போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து ஏடிஎம் சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபருக்கும் சித்திக்கும் என்ன தொடர்பு என போலீசார் விசாரணை செய்த பொழுது, அந்த நபர் சித்திக்கின் ஓட்டலில் 15 நாட்களுக்கு முன்பு பணிக்கு சேர்ந்த முகமது ஷிபிலி என்கிற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து முகமது ஷிபிலின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்த பொழுது அவர் மற்றொரு செல்போனுக்கு அடிக்கடி பேசி வந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது 18 வயது ஃபர்ஹானா என்கிற இளம்பெண்ணின் செல்போன் என தெரியவந்தது.
இதனை அடுத்து இரண்டு பேர் புகைப்படத்தையும் கண்டுபிடித்த கேரளா போலீசார், அதனை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். மேலும் ரயில் மூலம் இவர்கள் தப்பித்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நேற்று மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முகமது ஷிபிலி மற்றும் ஃபர்ஹானா ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை வைத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில், பெங்களூரில் இருந்து அசாமிற்கு செல்லும் டின்சுக்கியா எக்ஸ்பிரஸ் (tinsukia express) ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்த போது இருவரையும் போலீசார் பிடித்தனர்.
முன்னதாக இரண்டு பேரும் இளம் வயதினர் என்பதால் போலீசார் பிடித்த உடன் வேறு ஏதும் செய்து கொள்வார்களோ என்பதற்காக, அவர்களிடம் சாதுரியமாக பேசி அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
குறிப்பாக கொலை சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இரண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார்கள் என போலீசாருக்கு புகார் கிடைக்கப் பெற்றதாகவும், பெற்றோர்கள் காலை வந்து உங்கள் இருவரையும் அழைத்துச் செல்வார்கள் எனவும் கூறி இருவரிடமும் கொலை வழக்கு தொடர்பாக எதையும் பேசாமல் போலீசார் இருந்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.16 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து இன்று காலை கேரளா திரூர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து காதல் ஜோடி இருவரையும் கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர். Olavanna பகுதியில் தான் நடத்தி வரும் ஓட்டலில் தங்கி இருந்த சித்திக், பின்னர் எரஞ்சிபாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் 2 அறைகளை புக் செய்து உள்ளார்.
சித்திக் புக் செய்திருந்த அறையில் இருந்து முகமது ஷிபிலி ட்ராலி ஒன்றுடன் வருவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருப்பதாக கேரளா போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த அறையில் இருந்த மற்றொரு நபரையும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். முகமது ஷிபிலியை ஓட்டலில் வேலையில் இருந்து சித்திக் தூக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சித்திக் பழி வாங்கும் நோக்கத்திற்காக கொல்லப்பட்டு இருக்கலாமா அல்லது இது ஹனி ட்ராப்-ஆல் நடந்த கொலையா என விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரளா ஓட்டல் அதிபர் துண்டு துண்டாக வெட்டி உடல் ட்ராலியில் வைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.