சென்னை - கொத்தவால் சாவடி பகுதியில் மார்க்கெட், தொழிற்சாலைகள், சரக்கு வாகனங்கள் என எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் எளிதாக பரவ வாய்ப்பு இருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் விதமாக வணிக சங்கங்கள் மற்றும் சரக்கு வாகன சங்கத்திடம் போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் நாளை (13ஆம் தேதி) முதல் கொத்தவால் சாவடி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது, கொத்தவால் சாவடி உள்ளே செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை - லோன் ஸ்கொயர் - அண்ணாபிள்ளை தெரு வழியாகவும், பிரகாசம் சாலை பி.வி. ஐயர் தெரு வழியாகவும் உள்ளே செல்லலாம்.
மேலும், பிரகாசம் சாலை முதல் அண்ணா பிள்ளை தெருக்கள், தங்கச்சாலை வரை வாகனங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக செயல்படும். தங்கச்சாலை முதல் தாதா முத்தியப்பன் தெரு, பிரகாசம் சாலை வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
எனவே, இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ’மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும்’