சென்னை: அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதில் அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம், அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கியமான ஆவணங்கள் பத்திரங்கள் ஆகியவை திருடப்பட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகார் வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்களான பாபு மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பினர்.
இந்த வழக்கத்திற்காக காலையில் ஆஜரான பாபுவிடம் மதியம் வரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்பாக மாலை 4 மணி அளவில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் வாட்ஸ் அப் மூலம் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சுமார் 5 மணி நேரம் தன்னிடம் சிபிசி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அந்த சம்பவத்தின் போது தான் அந்த இடத்திலேயே இல்லை. காயம் அடைந்து, கே.எம்.சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான விபரங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். சுமார் 50 கேள்விகள் வரை தன்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு முறையாக, விளக்கமாக சிபிசிஐடி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பதில் அளித்துள்ளேன்.
தான் அந்த இடத்தில் இல்லாத போது தன்னை வழக்கில் சேர்த்திருப்பதில் இருந்தே தெரிகிறது அது பொய்யான புகார் என்று. நீதிமன்றத்தில் இதை சட்டப்படி சந்திப்பேன். சி.வி.சண்முகம் அளித்த புகாரில் வேல் காணாமல் போனது என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அது அங்கே தான் இருந்தது என்பது சிபிசிஐடி சோதனையில் தெரிய வந்தது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் தம்பதியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி...!