கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன். மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரிய வெற்றி பெறும். மக்களிடையே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒவ்வொரு இடத்திலும் காண முடிகிறது. மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். எதிர் அணியினர் தோல்வி பயத்தினால், தேர்தல் நாளில் பிரச்னை செய்துள்ளனர். இது எங்கள் வாக்குகளை அதிகரிக்குமே தவிர எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வன்முறை என்பது எங்கு நடந்தாலும், எப்படி நடந்தாலும், யார் மீது நடத்தப்பட்டாலும் கண்டிக்கத்தக்கது. அது யார் செய்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பி கிராமத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற களப்பணியைத் தொடங்கிவிட்டோம். இதில் திமுக வெற்றி வாகை சூடும்' என்றார்.