சென்னை: கே.கே. நகரை சேர்ந்தவர் பாஜக ஆதரவாளரும், யூ-ட்யூபருமான கிஷோர் கே.சாமி. இவர் சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதற்காக, கடந்த ஜூன் 14ஆம் தேதி சங்கர் நகர் காவல் துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
பிணை கோரிய கிஷோர் கே.சாமி
இந்நிலையில் கிஷோர் கே. சாமி தனக்கு பிணை வழங்க வேண்டும் என தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை.9) நடைபெற்றது. அப்போது, அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கிஷோர் கே. சாமி தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால் அவர் மீது 2018 முதல் 2021ஆம் ஆண்டுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களை அவதூறாக விமர்சித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் அண்ணா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் அவதூறாக விமர்சித்திருக்கிறார்.
பிணை மனு தள்ளுபடி
கடந்த ஜூன் 26ஆம் தேதி சென்னை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஹானா, மக்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பரப்பியதால் கிஷோர் கே.சாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க:கிஷோர் கே சாமி மூன்றாவது முறை கைது...