தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகக் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. அதனைத் தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தமிழ்நாட்டில் கடந்த 20 நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. நேற்று 1,779 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இது இரண்டாவது அலையின் தாக்கமாகவும் இருக்கலாம். பள்ளிகள், நிறுவனங்கள், கல்லூரிகளில் அதிகப்படியானோர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், சமய மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
முகக்கவசம் அணியாமல் 20 நிமிடங்களுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் இருந்தால் அவர்களுக்கும் கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும். மேலும் அரசு, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தீநுண்மி தொற்று மரபணு உருமாற்றம் பெற்ற பின்னர் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம், புனேவில் இரண்டு தீநுண்மிகள் உருமாறி உள்ளதாகவும், அந்தத் தீநுண்மி வேகமாகப் பரவுகிறது எனவும் கூறியுள்ளது.
எனவே, இரண்டாம் அலை வருகிறதா? அல்லது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாததால் வருகிறதா? என்பதை ஆய்வு செய்துதான் முடிவுசெய்ய வேண்டும்
கரோனா பாதிப்பு வந்தவர்களுக்கு இணை நோய் வருகிறதா? என்பதற்கான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தீநுண்மி தாக்கியவர்களுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் வருகின்றன. அவர்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொண்டால் மீண்டும் உடல்நிலை பழைய நிலைக்கு வரத் தொடங்குகிறது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி 81 விழுக்காடு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு வராது எனக் கூற முடியாது.
ஆனால் அவர்களுக்கு கரோனா தீநுண்மி தாக்குதல் வந்தால் அதிகளவில் பாதிப்பு இருக்காது. எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: வேகமாகப் பரவுகிறது உருமாறிய கரோனா - உதவிப் பேராசிரியர் சுகந்தி