சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சோ்ந்தவர் ராஜா(50). இவர் எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் அப்பகுதியில் நடந்த மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
இதையடுத்து தொண்டி காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்ய தேடினர். ஆனால் ராஜா காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாகினார். அதோடு அவர் வெளிநாட்டிற்கும் தப்பியோடினார்.
இதையடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளித்தார்.
இந்நிலையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
இந்த விமானத்தில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளி ராஜாவும் வந்தது தெரியவந்தது. அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை குடியுரிமை அலுவலர்கள் வெளியில் விடாமல் மடக்கிப்பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை காவலர்கள், ராஜாவை கைது செய்து ராமநாதபுரம் அழைத்து செல்ல சென்னை விமான நிலையம் விரைந்தனர்.