சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 86 ஏக்கர் நிலப்பரப்பில் 393.74 கோடி மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணிகள் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், இதன் சிறு சிறு இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பணிகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளதால், அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் இன்று (டிச.25) ஆய்வு செய்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சி.எம்.டி.ஏ.அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த நிலையில், அதிகாரிகளிடம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட வேண்டிய சிறு சிறு பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் செல்ல ஏதுவாக வழித்தடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியிருந்தார்.
அவரின் இந்த தொடர் ஆய்வு அக்கரையின் காரணமாக, தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்று, வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையம் 86 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சிகளும் முழுமை பெற்றிருக்கின்றன.
இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே பேருந்து நிலையம் திறக்கப்படும் சூழ்நிலை இருந்தும் தள்ளிப்போனதற்கான காரணம், மழைதான். மழைக் காலங்களில் பெருமளவு மழை தேங்கி இருப்பதைக் கண்டறிந்து, 1200 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று, தற்போது முடிவுற்று இருக்கிறது.
கடந்த ஒன்றரை மாதமாக விட்டு விட்டுப் பெய்த தொடர் மழையின் காரணமாக பணிகளை நிறைவாக முடிக்க முடியாத சூழல் இருந்தாலும், அந்த 1200 மீட்டருக்கு மூன்று பிரிவாகப் பிரித்து, இரவு, பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, இரண்டரை மாத காலத்தில் அந்தப் பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் போது 2 ஆயிரத்து 310 பேருந்துகள் தினந்தோறும் இங்குத் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். அதில், 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள். இந்த பேருந்து முனையத்தில், கிட்டத்தட்ட 1 லட்சம் மக்களின் பயன்பாடு இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
மேலும், இங்கு வருகின்ற மக்களுக்குத் தேவையான உணவு வசதி, உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவச் சிகிச்சை, பார்மசி, ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறை, தீத்தடுப்பு நடவடிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளன. இது, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் வெகு விரைவில் முதலமைச்சர் பொற்கரங்களால் திறக்கப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் புத்தாண்டிற்குள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முதலமைச்சரின் பொற்கரங்களால் திறக்கப்படும். மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம். கடந்த ஆட்சிக் காலத்தில் திட்டமிடல் இல்லாததால் தான், புதிதாகப் பொறுப்பேற்ற அரசு அனைத்து வகையிலும் இதற்குத் தேவையான கட்டமைப்புகளைப் புதிதாக உருவாக்கி வருகிறது.
இருப்பினும் பெரு வெள்ளம், கொரோனா போன்ற சூழ்நிலையால் இதற்குக் காலதாமதம் ஆனது. தமிழ்ப் புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியாகப் பயன்படுத்துவார்கள். மேலும், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, தமிழிசை செளந்தரராஜன் அரசை விமர்சித்த விவகாரத்தில், “முதலில் பாண்டிச்சேரியில் ஆளுநர் வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள்.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாமென்று சொல்லுங்கள். ஆவங்களுக்கு இருக்கிற பணியைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர்களின் எதிர்கால திட்டம் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தான். எங்குப் போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களுக்குத் தோல்வியைத் தான் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் தோல்வியைத் தான் பரிசாகத் தருவார்கள். ஆகவே பாண்டிச்சேரி கவர்னர் பொறுப்பிற்கு உண்டான பணியை மேற்கொண்டால் நல்லது” என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் தமிழிசை தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்: அமைச்சர் உதயநிதி காட்டம்!