சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக கடந்த 5ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக துணை தலைவத் கரு.நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ் செல்வம், கராத்தே தியகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக சென்னை மத்திய கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் முதலில் வரவேற்பு உரையாற்றினார்.
அப்போது அவர் , "இன்றைக்கு எதிர்க்கட்சி பாஜக தான். திறமை இல்லாத ஆளுமை இல்லாத எடப்பாடி" என சொல்லி வாய் மூடும் முன்பே, உடனே தடுத்து நிறுத்தி விஜய் ஆனந்த கையில் இருந்த மைக்கை கரு.நாகராஜன் கோபத்தோடு வேகமாக பிடிங்கிக் கொண்டார்.
பின்னர் பேசிய கராத்தே தியாகராஜன், நாசா விஞ்ஞானி செல்லூர் ராஜூக்கு நாவடக்கம் தேவை, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எல்லாம் அம்மா இருக்கும் போது பொட்டி பாம்பாக இருந்தார்கள். அண்ணாமலை எல்லாதுக்கும் துணிந்தவர். திராவிட கட்சிகளின் சலசலபுக்கும், காவல்துறை சலசலப்புக்கும் அஞ்சமாட்டார். அவர் ஒரு சிங்கம்" என்றார்.
செந்தில் பாலாஜி என கூறி மைக் டெஸ்டிங் செய்த அமர் பிரசாத் ரெட்டி, "முன்பு எல்லாம் பாஜக என்றால் சாப்ட். ஆனா அந்த பருப்பு இப்போது வேகாது. போலீஸ்காரர் மீது கேஸ் போட்டு என்ன ஆகப் போகிறது. அவர் எத்தனை பேர் மீது கேஸ் போட்டு இருப்பார். எத்தனை பேரை உள்ளே தள்ளி இருப்பார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பெரிய சிறைச் சாலையை அமையுங்கள். அமைத்து கலைஞர், அண்ணா என எப்படி வேண்டுமானும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சி ஏற்ற பிறகு அந்த சிறையில் உங்களை முட்டிக்கு முட்டி தட்டு உள்ளே போடுவோம். உடனடியாக ஏ.சி. உடன் கூடிய பிரமாண்டமான சிறைச்சாலையை அமைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய குஷ்பூ, "திமுகவைப் பார்த்து கேட்கிறேன். யாரை பார்த்து பயப்படுகிறீர்கள். அவர் மீது கேஸ் போடுகிறார்கள். அவர் பார்க்காத கேசா. சட்டம் தெரியாதவரா? சட்டத்தை படித்து இறங்கி வேலை பார்த்தவர் தான் அண்ணாமலை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்றால் பாஜகவால் தான் முடியும். இது தானாக சேரும் கூட்டம். காசு குடுத்து கூட்டும் கூட்டம் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேரும் கூட்டம் பிரியாணி, காசு கொடுத்து சேர்க்கிறார்கள். வட மாநில மக்கள் குறித்து தவறாக பேசியது யார்?. பானி பூரி விற்கத்தான் லாயக்கு என்றது யார்?. கக்கூஸ் கழுவுவது தான் இவர்கள் வேலை என சொன்னது யாரு? இந்தி தெரியாது போடா என்றது யாரு? எல்லாம் திமுக. அண்ணாமலை மீது உள்ள நம்பிக்கையை யாராரும் அசைக்க முடியாது.
24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்றார் அண்ணாமலை. கைது செய்ய வேண்டியதுதானே? அவர் எதற்கும் அஞ்ச மாட்டார். பயம் என்பது பாஜக டிக்ஸ்னரியில் இல்லை. மடியில் கனம் இருந்தால் தானே பயம் இருக்கும். எந்த ஊழலும் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு உள்ளது. அவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. தமிழ் மக்கள், தமிழகம், தமிழ் மொழி என பிரதமர் பெருமையாக பேசி வருகிறார். ஆனால் இங்கே இந்தி திணிப்பு என மக்களை திசை திருப்புகிறார்கள்.
கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை ஏன் பள்ளிகளில் கொண்டு வரவில்லை. ஏன் சி.பி.எஸ்.சி யை தேடி போரீர்கள். நீங்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 2வது மொழியாக இந்தி உள்ளது. பிரதமர் ஆகும் ஆசை உள்ளவர் முதல்வர். எனவே டெல்லி சென்றால் இந்தி பேசமாட்டாரா? யாருக்கு தெரியும், இப்போது இருந்தே கூட இந்தி கிளாஸ் ஆரம்பித்து இருப்பார். எனக்கு இந்தி நல்லா தெரியும். வேண்டும் என்றால் சொல்லுங்கள் உங்களுக்கு (மு.க.ஸ்டாலின்) இந்தி கிளாஸ் எடுக்கிறேன். இந்தி எப்படி எழுதனும் படிக்கனும் என்று நான் சொல்லி தருகிறேன்.
2024 மட்டும் அல்ல 2026-லிலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது. அண்ணாமலை வந்ததும் தமிழகத்தில் இவ்வளவு அலை இருக்கிறது. அண்ணாமலை எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடிக்கிறார். திமுகவில் இருக்கும் அத்தனை பேருக்கும் நான் சவால் விடுகிறேன். வாங்க ஒரு கை பார்த்துவிடுவோம். அண்ணாமலை மீது மட்டும் அல்ல. எங்கள் எல்லாரு மேலேயும் வழக்கு பதிவு செய்யுங்கள். எங்களையும் கைது செய்யுங்கள். எவ்வளவு நாள் சிறையில் வைக்கிறீர்கள் என பார்க்கிறேன்.
ஒரு குரல் கொடுத்தால் அடங்கி உக்காருபவர்கள் நீங்கள் என்பது நல்லாவே தெரியும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி உண்மையாக ஆட்சி செய்ய வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, மக்கள் சேவை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதை எல்லாம் பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பூ, "ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, ஆன்லைன் விளையாட்டில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகப் அரசிற்கு கூறுகிறேன். தமிழக ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். அது என்ன என்று தமிழக அரசு பார்க்க வேண்டும்.
ஆளுநர் பேசவே கூடாது என்றால் ஏன் அவருக்கு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆளுநருக்கு ஒரு பதவி உள்ளது அவர் மசோதாவை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் அவருக்கு அனுப்புகிறார்கள். பெண் தலைவராக ஒவ்வொரு பெண்ணிற்கும் தைரியம், தன்னம்பிக்கை தேவை. ஒவ்வொரு பெண்ணிடம் அது உள்ளது அதனை வெளிக்கொண்டு வரவேண்டும்" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், "மக்கள் திட்டங்களை செயல்படுத்த ஒரு அரசை தேர்ந்தெடுத்தால் மக்கள் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அவரின் ஜனநாயக கடமையை செய்யவிடாமல் தடுக்கக்கூடாது. அவர் வெளியிட்ட அறிக்கையை படித்து பாருங்கள். அதில் சட்ட விரோதமான, மக்கள் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும், கருத்துக்கள் ஏதாவது அதில் இருந்தால் அவர்கள் போட்ட வழக்கை நாங்கள் சட்ட ரீதியில் சந்திக்கிறோம். ஆனால் வழக்கே பொய் வழக்கு.
முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரா என்பது தான் இந்த அறிக்கையின் கேள்வி. எனவே இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநரின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று தான் அண்ணாமலை கூறினார். ஆளுநர் எப்படி அண்ணாமலை இடம் சொல்லுவார். ஆளுநர் சட்டப்படி தான் திருப்பி அனுப்பி விளக்கங்கள் கேட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியை அம்பேத்கர் மறுக்க காரணம் - அமைச்சர் துரைமுருகன் சொல்வதென்ன?