சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் 1991 - 1996 காலகட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் விமர்சனம் செய்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக, “பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை. பாஜகவின் தேசிய தலைமை அண்ணாமலையை கண்டிக்காவிட்டால், கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும். அதிமுக ஒரு ஆலமரம், பாஜக ஒரு செடி” என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் திருவண்ணாமலை ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து புகார் அளித்த விவகாரம் தொடர்பாக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “ஜெயக்குமார் பேசியதற்கு பதில் கூற முடியாது. அண்ணாமலைதான் பதில் கூற வேண்டும். நான் பாஜகவில் இருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் சிங்கம் அண்ணாமலைதான். அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விதமான மோதல்களும் இல்லை.
எங்களுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என கூறிவிட்டார். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறிய கருத்தை தேசிய தலைமை பார்த்துக் கொள்வார்கள். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் சட்டப்படியே பேசுகிறார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தார். அவருடன் பாஜக நட்பாக இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அல்லது பாஜக தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம். ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று எப்படி கேட்கலாம்” எனக் கூறினார்.
வருங்காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வர வேண்டும் என அமித்ஷாவின் கருத்திற்கு, மோடிக்கும், அமித்ஷாவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்றும், மோடியை பிரதமராக்க அமித்ஷா விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதில்லை. சரியாக படிப்பது இல்லை. சரியாக கேட்பது இல்லை. யாரோ சொல்வதை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார்” என கூறினார்.
பாஜக இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்று திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனத்திற்கு பதிலளித்த குஷ்பு, “பாஜக தமிழ்நாட்டிற்கு 2.40 லட்சம் கோடி வழங்கியுள்ளது. டி.ஆர்.பாலு சாலை அமைப்பதற்காக 50,000 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை வைத்திருந்தது. அதற்கு பதில் சொல்வாரா? ” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குஷ்பு, “முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பணத்தை வைத்து 4 தலைமுறை அல்ல, 40 தலைமுறை மக்களை வாழ வைக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டு காலத்தில் யாரும் பிரதமராகவில்லை என அமித்ஷா கூறினார்.
மக்கள் ஏற்றுக் கொண்டால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகலாம். இங்கு வாரிசு அரசியல் செய்து கொண்டிருப்பதால், பிரதமர் அளவுக்கு ஒரு தலைவரை உருவாக்க முடியவில்லை” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மகனுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஜெயக்குமார் ஆதங்கம்" - பாஜகவின் கரு.நாகராஜன் பதிலடி!