கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் மரடு பஞ்சாயத்து பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கட்டுமானம் செய்த கட்டுமான நிறுவனங்கள் மீதும், அதற்கு அனுமதி அளித்த கேரள அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் கேரள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து மரடு பஞ்சாயத்து பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனர் சானி ஃபிரான்சிஸ் மற்றும் விதிகளை மீறி அனுமதி அளித்த இரண்டு அரசு அலுவலர்களை கைது செய்தனர். இதேபோன்று நெட்டூர் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெயின் கோரல் க்ரோவ் என்ற அடுக்கு மாடி குடியிருப்பை உச்ச நீதிமன்றம் இடிக்க உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் கேரள மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கேரள தனிப்படை காவல்துறை சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும்,வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களையும் கேரள காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரையும் தற்போது கைது செய்ய கேரள காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 36 ஆண்டுகளுக்கு பின் சென்னை டூ இலங்கை விமான சேவை: ஜெய்சங்கர் வரவேற்பு