நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ், சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"தமிழ்நாட்டில் 1935 ஆம் ஆண்டு அன்றைய நகர சபை உறுப்பினர் தேர்தலில், அன்றைய விதியின்படி வரி கட்டியவர்களுக்கு மட்டும்தான் தேர்தலில் போட்டியிட நடைமுறை இருந்தது. அன்று சில ஆட்டுக்குட்டிகள் வாங்கி அதற்கு வரி கட்டி அதன் மூலமாக நீதிக்கட்சி வேட்பாளரை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் காமராஜரை நிறுத்தத் தேவையான பணியை செய்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்பது வரலாறு.
அத்தகைய வரலாறு ஏழாம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றது. அதைப் பற்றி பள்ளிகளில் வகுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திடீரென்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் , துணை முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளேன்.
வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கம்பட்டி கிராமத்தில் பிரபு என்னும் இளைஞர் மாற்று சமுதாயத்தினரால் கல்லால் அடித்து கொல்லப்பட்டதற்கு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளேன். கவன ஈர்ப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொடுத்தும் 15 நாட்களாகியும் அதை ஏற்க மறுப்பது ஜனநாயக படுகொலை. இது போன்று நடக்காமல் பேரவைத் தலைவர் பார்த்துக் கொள்ள வேண்டும்", என்றார்.