சென்னை, பாரிமுனையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளையொட்டி வேருக்கு விழா என்ற பெயரில் 1300 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொருட்கள் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடிகளுக்கு ஒரு பொற்கிழி மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்பட திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 1300 கழக மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யும், நமக்கெல்லாம் வேராக இருந்து கலைஞர் நம்மை இயக்கி வருகிறார் என்றும் மேலும் நம் கழகத்தின் வேராக இருக்கக்கூடிய மூத்த தொண்டர்களை பெருமைப்படக் கூடிய வகையில் இத்தகைய விழா கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் தாங்கள் ஆற்றிய பணிக்கு எதுவும் சமம் ஆகாது எனவும்; தங்களை கௌரவப்படுத்துவதன் மூலம் எங்களது பணியை மேலும் சிறப்பாக செயல்படுத்த இது போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் முதலமைச்சராக நான் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதி என நமது கழக தோழர்கள் பொறுப்புக்கு வரக்காரணம் நீங்கள் தான் என்றும்; அவர்களுக்கு கழகம் துணைநிற்கும் எனவும் திமுக நிர்வாகிகளும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பிறந்தநாள் அவருக்காக(கலைஞருக்காக) கொண்டாடப்படவில்லை எனவும்; மக்களுக்காகவே அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாகவும் அவரது பிறந்த நாளில் ஏராளமான நலத்திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஏழை எளிய மக்கள் சிறுபான்மையினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
பொதுவுடைமைக் கட்சி ஆட்சி செய்த கொல்கத்தாவில் கூட கைரிக்க்ஷா ஒழியவில்லை எனவும்; ஆனால் தமிழகத்தில் கை ரிக்க்ஷாவை ஒழித்து அந்த தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மறு வாழ்வு அளித்தவர் திமுக மூத்த தலைவர் கருணாநிதி எனவும் தெரிவித்தார்.
கண் சிகிச்சை, பிச்சைக்கார்களுக்கு மறுவாழ்வு, தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு, உடல் ஊனமுற்றோரை குறையாக காணாமல் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செய்யாத அளவு செய்து மறுவாழ்வு அளித்து தனது பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி கொண்டாடி அவர்தான் என முதலமைச்சர் தெரிவித்தார்.
1949இல் தொடங்கப்பட்ட திமுக 1957இல் சட்டமன்றத்தில் நுழைந்து 1971 ஆண்டு 184 இடங்களில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக நுழைந்தது எனவும்; தற்போது வரை அந்த வெற்றியை யாரும் முறியடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழல்களில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி வந்த நிலையில் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை எளிய சிறுபான்மை மக்களுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக, பாடுபட்டு வரக்கூடிய கட்சி என முதலமைச்சர் தெரிவித்தார்.
திமுக கட்சி ஆரம்பித்தபோது முதலமைச்சர் பதவியை பிடிப்போம் என யாரும் கூறவில்லை எனவும்; ஆனால் தற்போது கட்சி ஆரம்பித்தவர்கள் நாங்கள் தான் முதலமைச்சர் என்று கூறி கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுடன் மறைமுக மோதலில் ஈடுபடுகிறாரா சிவி சண்முகம்?