தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையோடு சேர்த்து, அரசியல் களமும் தீவிரமடைந்துவருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கிட்டத்தட்ட தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கிவிட்டார்கள்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துவரும் கமல்ஹாசன், அந்த மேடையை தனக்கே உரித்தான பாணியில் தனது அரசியல் பயணித்திற்காக லாவகமான முறையில் நுணுக்கமாகப் பயன்படுத்திவருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
தற்போது, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் அரசுப் பேருந்துகளில் ஒழுகும் மழைநீரை மையமாகக் கொண்டு, கமல்ஹாசன், மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.