சென்னை: கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானார். இதனால் இந்த தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காகக் கடந்த ஜனவரி 31 அன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 7 அன்று முடிவடைந்தது.
இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் முதலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், அதிமுக பொதுக்குழு வழக்கு, இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல், ஈபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீதான தீர்ப்பு, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனின் ஒப்புதல் படிவம் ஆகியவற்றால், ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இதனால் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக, தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுவிட்டு, இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற நான்குமுனை போட்டி உருவாகி உள்ளது. இதனிடையே வேட்புமனு பரிசீலனையின் அடிப்படையில் 77 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெளியிட்டார்.

இதனிடையே பிரதான கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக - காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்களும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Erode East: நான்குமுனை போட்டி.. அரசியல் கட்சிகளின் திட்டம் என்ன?