சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சார்பில், மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரத்தை கமல்ஹாசன் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், "இது என் பிறந்தநாள் என்பதை விட, முக்கியமான ஒரு நல்ல நாள். இதில் அரசியல் ஆதாயம் கடந்து மனித நேயம் சம்பந்தப்பட்டது. நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா. மனிதம் சார்ந்து, நான் உள்பட அமைச்சர்கள் வந்துள்ளோம். இந்த வாயு ஜெல் என்ற இயந்திரத்தை ராஜ் கமல் நிறுவனத்தில் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இதை பயன்படுத்தலாம். முன் மாதிரியாக இதை செய்வதால், இதைப் பார்த்து பயன்படுத்தி, அனைத்து மருத்துவமனையிலும் என்னைப் போன்றவர்கள் அரசுக்கு கை கோர்ப்பார்கள். மேலும், இது இந்தியாவில் ஐஐடியில் செய்து உள்ளனர். இதை ஒரு முன் மாதிரியாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.
இது போன்று பல இடங்களில் மற்றவர்கள் செய்ய வேண்டும். கட்சி சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றுள்ளது. இது போன்ற இயந்திரம் உள்ளது என்று அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில், முன் முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
இந்த நிகழ்வை திமுகவின் கூட்டணிக்கான அச்சாணியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம்தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. எங்களுக்கு தனிக்கட்சி இருக்கிறது. இதில் அரசியல் இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் என்னும் திரைக்கலைஞன் தமிழ் சினிமாவுக்கு தந்த அழியா சுவடுகள்!