கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், 220 மெகாவாட் முழு திறன் கொண்ட இரண்டாவது பிரிவு முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருக்கிறது. நிவர் புயல், தீவிர புயலாக மாறி நாளை (நவம்பர் 24) 120 கி.மீ., வேகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ., தொலைவில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கல்பாக்கம் அணு சக்தி நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளும் முறையாக இயங்கிக் கொண்டிருப்பதால் புயல் கரையைக் கடக்கும் பொழுது அதன் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ள இந்திய அணுசக்தி நிறுவனத்தின் நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ், "புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு, கடற்கரையோரங்களில் மணல் மூட்டைகளை வைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலைய அலுவலர்கள், தேவையானபோது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க:அமீரகத்தில் செயல்பாட்டை தொடங்கிய முதல் அணுமின் நிலையம்!