கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி மரணமடைந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூலை 17) அமைதியான முறையில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் மாணவர்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பள்ளி வளாகம் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த கலவரச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சுமார் 330 க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மரணமடைந்த பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, மர்ம மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், வரும் 29 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதில் விழுப்புரம் சிபிசிஐடி - ஏடிஎஸ்பி கோமதி தலைமையில், திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு