சென்னை: சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி +2 பயின்ற கள்ளக்குறிச்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து இறந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து உடற்கூறு ஆய்வில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 17) போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் தனியார்ப் பள்ளிக்குள் நுழைந்து பள்ளியை சூரையாடினர். இந்தக் கலவரத்தில் காவலர்கள் பலரும் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவலர்கள் அணைவரும் உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள கவலர்கள் முழு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: போர்க்களமாக மாறிய போராட்டம்... பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்!