இயல், இசை, நாடகம், திரை, கிராமியக் கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் கலைமாமணி விருது, கேடயம் ஆகியவற்றை வழங்கிவருகிறது. 2011 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பின் கலைமாமணி விருது வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இந்தாண்டு கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சந்தானம், பிரசன்னா, நளினி, பாண்டு, பிரியாமணி, பரவை முனியம்மா உட்பட பல கலைஞர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.
அதன்படி நாளை மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தலைமைச் செயலர் சண்முகம், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற தலைவர் தேனிசைத் தென்றல் தேவா, சுற்றுலா பண்பாட்டுத் துறை கூடுதல் செயலர் அபூர்வ வர்மா ஆகியோர் கலந்து-கொள்ளவுள்ளனர்.