சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்துவரும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, "முகக்கவசம் அணிவோம், கரோனாவை வெல்வோம்" என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை சென்னை மாநகராட்சி அலுவலர்களிடம் தனியார் நிறுவனங்கள் ஒப்படைத்தனர்.
சிறப்பு குழு அமைத்து கண்காணிப்பு
கூட்டத்திற்கு பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னையில் கரோனா தாக்கம் முன், பின்னாக பதிவாகி வருகிறது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
அதனைத் தடுக்க அனைத்து பகுதிகளும் காவலர்கள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதோர் குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வர முடிவு செய்துள்ளோம்.
வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், சுப நிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு மண்டல அமலாக்க குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.
ரூ. 4.5 கோடி அபராதம் வசூல்
அவரைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இனி வரும் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) சென்னையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இதுவரை 56 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் சென்னையில் கையிருப்பில் உள்ளன. சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னையை பொருத்தவரையில் முதல் தவணை 38 லட்சம் தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையில் 17 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
அதாவது 65 விழுக்காடு நபர்கள் சென்னையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும். இதுவரை கரோனா விதிகளை மீறியதற்காக கிட்டத்தட்ட ரூ. 4.5 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!