சென்னை: வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் மீது வழக்குப்பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக டி.ஜி.பிக்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அறிவுறுத்தியுள்ளார்.
வழக்குகளில் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதை இயந்திரத்தனமாக மாஜிஸ்திரேட்கள் அங்கீகரிக்கக் கூடாது எனவும், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் 1% கொடுத்தால் அம்பேத்கரிய நூலகம் அமைக்க வாய்ப்பு கிட்டும் - திருமாவளன்
அதில், குறிப்பாக வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களின் கணவரின் பெயருடன் அவருடைய குடும்பத்தினர் பெயர்களும் சேர்க்கப்படுவதாகவும், இதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்குப் பதில், கணவரின் பெயரை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும், விசாரணைக்குப் பிறகே, குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா? எனத் தெரியவரும் என்பதால், குடும்பத்தினர் பெயரை சேர்க்காமல் 'மற்றும் பலர்' என குறிப்பிட வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கைகளில் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படும்பட்சத்தில், அது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அவர்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இனி, வரதட்சணை கொடுமை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளில் கணவரின் பெயரை மட்டும் குறிப்பிடும்படி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும், குடும்பத்தினரின் பெயர்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக மற்றவர்கள் எனக் குறிப்பிடலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 2-வது நாளாக காற்றாடி திருவிழா:உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்!