சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விசாரணை தொடர்பாக முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜராகி ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், விசாரணை குழுவினருக்கு கூடுதல் ஆவணங்களை பல்கலைக்கழகம் தராத நிலையில், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், வரும் திங்கள்கிழமை (டிச.28) நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது. அந்நாளில் வெங்கடேசன் உள்ளிட்ட சில அலுவலர்களிடமும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.