சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலலாளருமான ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கும், சிலைகளுக்கும் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்து தங்களது துக்கத்தை வெளிபடுத்திய அவர்கள், உறுதிமொழி எடுத்தனர்.
அதில் எடப்பாடி பழனிசாமி, “தனி ஒருவராக சட்டமன்றதுக்குச் சென்று சிங்கமென கர்ஜித்தவர் ஜெயலலிதா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் நெஞ்சுரம் கொண்ட இரும்பு பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஜெயலலிதா. ஜெயலலிதாவால் பயிற்றுவிக்கப்பட்ட உடன்பிறப்புகளாகிய நாம், ஜெயலலிதாவுக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடனாக, அதிமுக ஆட்சி மீண்டும் அமைக்க அனைவரும் சபதம் ஏற்க இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். இந்த நேரத்தில் எதிரிகளை விரட்டி அடித்து, துரோகிகளை தூள் தூளாக்குவோம் என உறுதி ஏற்போம்” என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'மக்களின் வாழ்க்கை முறையை உயர்த்த அல்லும் பகலும் உழைத்தவர் ஜெயலலிதா. அதிமுக சார்பில் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளோம். தொண்டர்களின் எழுச்சியைப் பார்க்கும்போது ஜெயலலிதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்கிற நிலையே ஏற்படுகிறது' எனக் கூறினார்.
இதையடுத்து, ஜெயலலிதா மறைந்த 6 ஆண்டுகளில் 4 அணிகளாக அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், 'அதிமுகவில் பிரிவு என்பதே இல்லை. மக்கள் இயக்கமான அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. ஓபிஎஸ் நீக்கப்பட்டதைப் பிளவாகப் பார்க்க முடியாது. "சமுத்திரத்திலிருந்து ஒரு டம்ளர் நீரை வெளியில் வாரி இறைத்துவிட்டால் சமுத்திர நீர் குறைந்து விட்டதாக ஆகுமா?” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜி20 மாநாடு ஆலோசனைக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தான் அழைப்பு வந்துள்ளது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவில்லை. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது” என்றார்.
மேலும், “திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பது கடைக்கோடி தொண்டருக்கும் தெரியும். திமுகவில் முதல் ஆளாக ஆர்.எஸ்.பாரதி குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த குரல்கள் எழும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவை பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ கவலையில்லை. அவரது மகனுக்கு முடிசூட்டுவது குறித்தே சிந்தித்து வருகிறார்.
திமுகவில் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. காட்டெறும்பு சிற்றெறும்பு ஆன கட்சியாக திமுக மாறும். திமுகவில் சபரீசன் ஆளுமை செலுத்துவது கட்சி நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு