சென்னை: வண்ணாரப்பேட்டை நகராட்சி 49ஆவது வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவினர் பலர் இணைந்து, திமுக பிரமுகர் நரேஷ் என்பவரைச் சரமாரியாகத் தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது.
ஜெயக்குமார் கைது
இதனையடுத்து திமுக பிரமுகர் நரேஷ் தண்டையார்பேட்டை காவல் துறையினரிடம் அளித்தப் புகாரின்பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிப்ரவரி 21ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் வைத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
சிறையில் அடைப்பு
கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜார்ஜ் டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா முன்பு முன்னிறுத்தினர். பிப்ரவரி 7ஆம் தேதிவரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.
பிணை மனு நிராகரிப்பு
இந்த வழக்கில் பிணை கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பினர் மனுதாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது ஜெயக்குமார் மீதான வழக்கில், கொலை முயற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பிணைகோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (பிப். 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் பிணை கோரிய மனு தங்களுக்கு வரவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறை தரப்பிற்கு மனு நகலை வழங்க ஜெயக்குமார் தரப்பிற்கும், அதற்கு விளக்கம் அளிக்க காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
சாலை மறியல்
மேலும், புகார்தாரர் நரேஷ் தரப்பு ஆட்சேபத்தை இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (பிப்ரவரி 25) தள்ளிவைத்தார். தேர்தல் நாளான பிப்ரவரி 19ஆம் தேதி, காவல்துறையைக் கண்டித்து ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ராயபுரம் எம்.சி. சாலை, கல் மண்டபம் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ராயபுரம் காவல் துறையினர், ஜெயக்குமார் உள்பட 70 பேர் மீது தொற்று நோய்ப் பரவல் சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் துறையினர் பதிந்த வேறொரு வழக்கில் ஜெயக்குமார் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ராயபுரம் காவல்துறையினர் பதிந்த இந்த வழக்கில் ஜெயக்குமார் நேற்று (பிப்.23) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2ஆவது வழக்கில் பிணை
ஏற்கெனவே மற்றொரு வழக்கில் சிறையிலிருந்ததால், ட்ரான்சிட் வாரண்ட் மூலம் ஜெயக்குமாரை நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன்னிறுத்தினர். இந்த வழக்கில் மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இரண்டாவது வழக்கிலும் பிணை கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இரண்டாவது வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிணை வழங்கி ஜார்ஜ் டவுன் 16ஆவது நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறையில் கொசுக்கடி: மன உளைச்சலில் மாத்திரை எடுக்க மறுத்த ஜெயக்குமார்