சென்னை: இன்று (ஜூன் 25) சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுகவின் அடிமட்ட தொண்டர் கூட உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய அதிமுகவின் அவைத்தலைவர் அப்பொழுது கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆவார்.
திமுக எப்போதும் எங்களுக்கு ஒரு தீயசக்தி. கொடிகட்டிய தொண்டன் கொடி பொருந்திய காரில் வருவது அதிமுகவில் மட்டுமே நடைபெறும். ஈபிஎஸ் தான் ஒற்றை தலைவராக வரவேண்டும் என்பது அதிமுகவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒலிக்கிறது. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனைத்தும் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவிற்கு மட்டும்தான் உள்ளது.
ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடாக உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு கட்டாயமாக ஒற்றை தலைமை நிறைவேற்றப்படும். ஒட்டுமொத்த பொதுக்குழுவின் நிலை ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான்.
பாஜக ஒற்றை தலைமை விவகாரத்தில் மூன்றாவது நபர் கட்சி. மூன்றாவது நபர் தலையீடு என்பதை எந்த காலத்திலும் அதிமுக ஏற்காது. திமுக நினைத்தது போன்று ஏழு ஜென்மம் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. ஓபிஎஸ்ஸை பொதுக்குழுவில் நாங்கள் அவமானம் செய்யவில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் நல்லது' - திருநாவுக்கரசர் எம்பி