தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர் முத்துக்குமார் (28). சென்னை கொளத்தூரில் வசித்துவந்த அவர் ஒரு ஊடகத்தில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்துவந்தார். இலங்கை இறுதிப்போரில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்து அப்போது வந்த செய்தித்தாளைப் பார்த்த முத்துக்குமார் மனவேதனையில் உழன்றுள்ளார்.
2009ஆம் ஆண்டில் ஜனவரி 29ஆம் தேதியன்று, தமிழீழத்தில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணைபுரிந்ததாகக் மனவேதனையுடன் குற்றஞ்சாட்டியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்பு தீக்குளித்தார்.
உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் அவர் தன் கையிலிருந்த பிரசுரங்களை வீசி ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சைப்பலனின்றி உயிர்நீத்தார்.
இறக்க முன்பு முத்துக்குமார் காவல் துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், “... இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு (காங்கிரஸ் அரசாங்கம்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இறப்பதற்கு முன்னர் அவர் வழங்கிவிட்டுச் சென்ற 'மரணசாசனம்'தான் பின்னாளில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் எழுச்சியடையச் செய்தது.
இன்று ஈகி முத்துக்குமாரின் 11ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உள்பட இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 27 பேரின் நினைவாக மலர்த்தூண் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். திராவிட அமைப்பினர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே முத்துக்குமார் தீக்குளித்த நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்துக்குள் சென்று அஞ்சலி செலுத்த தமிழர் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்தனர். சாஸ்திரி பவன் அமைந்துள்ள சாலைக்கு 'முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்' என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி, சாஸ்திரி பவன் நோக்கிச் சென்றவர்களைக் காவல் துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : உணவகங்களில் காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி? - இருவர் கைது