சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அந்த அமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜன.2) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரா.தாஸ் உள்ளிட்டோர் கூறும்போது, "முதலமைச்சர் அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்தோம். அப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தோம்.
அதே நேரத்தில் நான்கு சதவீத அகவிலைப்படியுடன், ஆறு மாத நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். மேலும், ஆசிரியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி என்பது, நிதிச்சுமையோ, நிதி இழப்பு அல்ல என முதல்வர் தெரிவித்தார்.
ஈடு கட்டிய விடுப்பை பணம் ஆக்கிக் கொள்ளும் உரிமையையும் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். ஜாக்டோ ஜியோ சார்பில் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறோம். அதையெல்லாம் அவர் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார். வரும் ஐந்தாம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் தொடர்பாக இன்று மாலை கலந்து பேசி, அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்