ETV Bharat / state

சாதியற்ற சமூகத்தைப் படைக்க அயோத்திதாசரின் தேவை என்ன?

author img

By

Published : May 20, 2021, 12:01 AM IST

தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ஒரு மாபெரும் சிந்தனையாளர் வெறும் தலித் அடையாளமாக இன்று சுருக்கப்படுகிறார். அயோத்திதாசப் பண்டிதரை ஒரு நூற்றாண்டு காலம் மறந்த தமிழ்ச் சமூகம், நீண்ட நாட்களுக்குப் பின்னரே அவரது சிந்தனைகள் கண்டுணர்ந்தது. எனினும், பெரியாரைக் கொண்டாடியதைப் போல, அம்பேத்கரைக் கொண்டாடியதைப் போல அவர் கொண்டாடப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

iyotheedas-forgotten-refomer-idealogue
சாதியற்ற சமூகத்தை படைக்க அயோத்திதாசரின் தேவை என்ன?

சென்னை: தமிழர்கள் சாதியற்றவர்களாய் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் முன்வைத்தவர் அயோத்திதாசப் பண்டிதர். 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தை நவீனத்துக்கு அழைத்து வந்ததும் அவரே. ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் சாதிகளாலும், மதங்களாலும், அரசியலாலும், சமஸ்தானங்களாலும் நாடு பிளவுபட்டிருந்த நேரத்தில் தமிழர்கள் மொழியால் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய முன்னோடி அயோத்திதாசர். அதற்குத் தமிழர்கள் சாதியை விட்டொழிக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஆய்வாளர், சிந்தனையாளர், பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட அயோத்திதாசப் பண்டிதர், 1845ஆம் ஆண்டு இதே நாளில் (மே 20) பிறந்தார். இன்றைய நவீன தமிழ்ச் சமூகத்துக்கு அதன் அடையாளத்தைக் கொடுத்தவர். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் ஒலித்தவர், திராவிட இயக்கத்துக்கு முன்னோடியாக இருந்து, திராவிடர் என்ற எண்ணத்துக்கு அடித்தளமிட்டவர். பொது தளத்திலிருந்து மாற்றி சிந்திக்கக்கூடிய கலகக்காரர். அவர் பிறந்த தினத்தில் அவரது செயல்பாடுகளும், சிந்தனைகளும், இன்றைய காலகட்டத்தில் அவற்றின் தேவை குறித்தும் அறிய வேண்டியது அவசியம்.

தமிழும், பௌத்தமும்

தமிழர்கள் சாதிய அடையாளத்தை விட்டு மொழியால் ஒன்றுபட வேண்டும் எனக் கூறியவர்களுள் முதன்மையானவர் அயோத்திதாசப் பண்டிதர். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தை நவீனத்துக்கு அழைத்து வந்ததில் அவர் மிகவும் முக்கியமானவர். அயோத்திதாசர் முன்னெடுத்தது சமூக வரையறை ஆக்கம் என்கிறார் அவரது எழுத்துக்களை தொகுத்து வெளியிட்ட ஆய்வாளர், அலாய்சியஸ். "வரலாற்று காலம் தொட்டு தமிழ்ச் சமூகம் சாதியற்ற சமூகமாகத்தான் இருந்தது. மீண்டும் அதுபோன்ற சாதியற்ற சமுதாயத்தைப் படைக்கத்தான் அவர் தமிழையும் பௌத்தத்தையும் தூக்கிப் பிடித்தார். இன்றைய உலகில் சாதிய வேற்றுமைகளைக் களைய அவரது சிந்தனைகள் முக்கியம்" என்கிறார், அவர்.

iyotheedas-forgotten-refomer-idealogue
அயோத்திதாசர் சிந்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட அலாய்சியஸ்

சாதியற்ற தமிழ்ச்சூழலைப் படைக்க அயோத்திதாசர் பௌத்தத்தைக் கையிலெடுத்தது மிக முக்கியமான ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்து மதத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும், அதே சமயத்தில் பெருவாரியான மக்களை மதமில்லாமல், பண்டிகைகள் இல்லாமல் ஒன்றிணைத்து கொண்டு செல்ல முடியாது என்பதை அறிந்து அதற்கான மாற்றுப் பண்பாட்டைத் தேடினார்.

1898ஆம் ஆண்டு பௌத்த மதத்தைத் தழுவிய அவர், சென்னையில் பௌத்த சங்கத்தை நிறுவி, தமிழ்நாடு முழுவதும் கிளைகளைப் பரப்பி அதன்வாயிலாக பௌத்தத்தைப் பரப்ப பாடுபட்டார். பௌத்த மதக் கோட்பாட்டை அயோத்திதாசர் வெறும் அறிவுத் தளத்தில் மட்டும் வைக்காமல், வெகு ஜனங்களுக்கும் எடுத்துச் செல்ல முயன்றார். இதற்காக பௌத்த சங்கத்தை நிறுவுவது, பத்திரிகை நடத்துவது, விழாக்களை நடத்துவது, புத்தகம் எழுதி வெளியிடுவது எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டார்.

மாற்று அடையாளத்தை நிறுவும் முயற்சி

சாதாரண மக்களுக்கு விழாக்களும், நம்பிக்கையும் தேவைப்படுகிறது, அவையில்லாமல் மற்ற மதங்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதால் அயோத்திதாசர் இப்பணிகளையெல்லாம் மேற்கொண்டார். மாற்று அடையாளத்தை நிறுவ வெறும் ஏட்டுக்களை மட்டும் படிக்காமல், மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒளிந்திருக்கக் கூடிய வரலாற்றுத் தடங்களை அவர் உற்று நோக்கினார். பண்டைய தமிழ் இலக்கிய ஏடுகளையும், இலக்கணப் பனுவல்களையும் பல முறை அவர் வாசிக்கலானார். கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் பழக்கங்கள், அந்தப் பகுதியில் நிலவும் கொண்டாட்டங்கள், செவிவழிக் கதைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் வாழ்ந்த பல சிந்தனையாளர்களுள் அவர் வேறுபட்டு நிற்பது இந்தப் புள்ளியில்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கால கட்டத்தில் நிலவிய பார்வையை மாற்றியதில், அவரது பங்கு முதன்மையானது. அதனை ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றிலிருந்து மட்டும் தரவுகளை எடுத்துக்கொள்ளாமல் நாட்டார் பழக்கவழக்கங்களையும், நாட்டுப்புற இறை வழிபாட்டையும் ஆராய்ந்து புதிய கண்ணோட்டத்துடன் அவர் வரலாற்றை அணுகினார். அதன் முடிவில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்பு, கல்வியில் சிறந்தவர்களாகவும், பண்பாட்டில் உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள் என்றார்.

iyotheedas-forgotten-refomer-idealogue
'தமிழன்' என்னும் வார இதழ்

மேற்கத்திய சிந்தனையின் தாக்கம் தமிழ் அறிவுலகத்தின் மீது படர்வதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவரான அயோத்திதாசரின் சிந்தனைகள் தற்காலத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வரலாறுகளுக்கும், சிந்தனைகளுக்கும் மாறுபட்டதாகவும் இருக்கிறது. அவர் ஏற்கெனவே நிறுவப்பட்ட வரலாற்றை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இதனாலேயே பலரும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திராவிடர், தமிழர் என்ற அடையாளம்

திராவிடர் என்ற அடையாளத்தை வழங்கியதில் அவரது பங்களிப்பு பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1881ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது பஞ்சம் வகுப்பினரை இந்துக்கள் பட்டியலில் சேர்க்கக்கூடாது, அவர்களை ஆதித் தமிழர்கள் எனக் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், திராவிடப் பாண்டியன் பத்திரிகையை நடத்தினார். தனது நண்பர்களுடன் சேர்ந்து 'திராவிட மகாஜன சபா' என்ற சங்கத்தை நிறுவினார்.

1907ஆம் ஆண்டு 'தமிழன்' என்ற வார பத்திரிகையைத் தொடங்கி அதில் சமூகம், கலாசாரம், சாதி உள்ளிட்ட பல விஷயங்களை எழுதியும் விவாதித்தும் வந்தார். அப்போது ஆங்கிலேயர்களின் அடக்குமுறை, 'பிளேக்' கொள்ளை நோய் உள்ளிட்டவையே அக்கால பத்திரிகைகளின் கவனமாக இருந்தது. ஆனால், அயோத்திதாசர் சமூக பிரச்னைகள், தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, வறுமை போன்றவை குறித்தும் 'தமிழன்' பத்திரிகையில் தொடர்ந்து பேசினார்.

சென்னையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி, நில உரிமைகளைப் பெறும் வேளையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் பெரியார், அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய இடதுசாரித் தலைவர் சிங்காரவேலர் ஆகியோரது கருத்துகளில் இவரது தாக்கம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

'திராவிடம் என்பதன் பொருள் மாறிக்கொண்டே வந்தாலும், அயோத்திதாசர் அதற்கு முன்னோடி என்பதை மறுக்க முடியாது, பெரியாருக்கு அவர் முன்னோடி' என்கிறார், அலாய்சியஸ். அரசியல் களத்தில் விடுதலை பெற்றுவிட்டால் மட்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையாது என்பதால் பௌத்தத்தை முன்னிறுத்தி மாற்று வாழ்வியலை, கலாசாரத்தை அயோத்திதாசர் முன்வைக்கிறார் எனக் கூறுகிறார், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

iyotheedas-forgotten-refomer-idealogue
ஸ்டாலின் ராஜாங்கம்

பண்டிதரின் இன்றைய தேவை

தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ஒரு மாபெரும் சிந்தனையாளர் வெறும் தலித் அடையாளமாக இன்று சுருக்கப்படுகிறார். அயோத்திதாசப் பண்டிதரை ஒரு நூற்றாண்டு காலம் மறந்த தமிழ்ச் சமூகம், நீண்ட நாட்களுக்குப் பின்னரே அவரது சிந்தனைகள் கண்டுணர்ந்தது. எனினும், பெரியாரைக் கொண்டாடியதைப் போல, அம்பேத்கரைக் கொண்டாடியதைப் போல அவர் கொண்டாடப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

இன்னும் சொல்லப்போனால் காலப்போக்கில், அவரது பெயர் வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கிறது, அதில், திராவிட இயக்கங்களுக்கும், பெரியாருக்குமே பங்கிருக்கிறது என அயோத்தி தாசர் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் தருமராஜ் போன்றவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

'ஈவேராவை தலித்துகளின் மீட்பராகக் கட்டமைக்கும் இன்றைய அரசியல் புனைவுகளை முழுமையாக மறுக்கவேண்டியிருக்கும் என்பதாலேயே பண்டிதர் மறைக்கப்பட்டார்' என அன்பு பொன்னோவியம் தன்னிடம் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். தலித் மக்களின் தாழ்ந்த நிலையை ஆழ்ந்த அனுதாபத்துடன் முன்வைப்பவர்கள், அவர்கள் நேற்று உயர் நிலையில் இருந்திருக்கலாமென்பதை எப்படி ஆவேசமாக மறுக்கிறார்கள் என அன்பு பொன்னோவியம் சுட்டிக்காட்டியதாக ஜெயமோகன் கூறுகிறார்.

கடவுள் இல்லை என்ற திராவிடர் கழகத்தினர், ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றனர். இடதுசாரி சிந்தனையாளர்களிடமும், தமிழ்த்தேசியம் பேசுபவர்களிடமும் மாற்று கலாசாரம் குறித்த தெளிவு இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. ஆனால், இன்றளவும் அவர்கள் அயோத்திதாசர் முன்வைத்த கருத்துகளை ஏற்கவோ, விவாதிக்கவோ முன்வருவதில்லை.

iyotheedas-forgotten-refomer-idealogue
அயோத்திதாசர் நடத்திய ஒரு பைசாத் தமிழன் பத்திரிகை

அயோத்திதாசர் மறைந்து நூற்றாண்டு கடந்தும் அவர் முன்வைத்த பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அதற்கான தீர்வுகளையும் அவர் விட்டுச்சென்றிருக்கிறார் என்பதை சொல்லத்தேவையில்லை. சமூக-அரசியல் ரீதியில் தலித் மக்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், அவர்கள் மீதான வன்முறையும் தொடர்ந்து வருகிறது. இங்கு வன்முறை என்பது வெறும் உடல் ரீதியான தாக்குதலை மட்டும் குறிப்பதில்லை.

இதன்மூலம் மாற்று கலாசாரம் இல்லாமல் சமூக மாற்றம் ஏற்படாது என்பது தெளிவாகிறது. மத ரீதியிலாகவும், சாதிய ரீதியிலாகவும் பிளவுபடுத்தும் அரசியல் நாட்டை அச்சுறுத்தும் சூழலில், பண்டிதரின் மாற்று பண்பாட்டு- கலாசார கதையாடல்கள், சிந்தனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவசியமாகிறது.

இதையும் படிங்க: திராவிட பிதாமகன் பண்டிதர் அயோத்தி தாசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.