சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் இன்று (அக்.5) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தி.நகர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள பாரத் யுனிவர்சிட்டி கல்லூரி, பல்லாவரத்தில் உள்ள வேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, பள்ளிக்கரனை பாலாஜி மெடிக்கல் கல்லூரி, தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு சோதனை நடைபெறும் இடங்களில் சுமார் 1,000 ஆயுதப்படை போலீஸ்சாரி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவருடைய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை முதல் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த வருகின்றனர். மேலும், எம்பி ஜெகத்ரட்சகன் பல நிறுவனங்களில் தற்போது முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையான வரி செலுத்தவில்லை என்பதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், ஜெகத்ரட்சகன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளிலும், முன்னாள் மத்திய தொழில் துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் பதிவி வகித்துள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைதிப்படை வீரர்களுக்கான இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கு; மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து!