சென்னை: சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அலுவலகம் உட்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலை 5 மணி முதல் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டில் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்னும் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவரது தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச் செழியனின் தம்பி அழகர்சாமி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் அன்புச் செழியனின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அசல் நகலை, ஜெராக்ஸ் எடுப்பதற்காக வருமான வரித்துறையினர் தற்போது ஜெராக்ஸ் மிஷினையும் எடுத்து வந்துள்ளனர்.
மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரெய்டு!