திருவண்ணாமலை : தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள், உறவினர் வீடு மற்றும் அலுவலகம், அவர்கல் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 80 இடங்களில் நேற்று (நவ. 3) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணித்துறை கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கிடைத்த புகார் மற்றும் கடந்த முறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் அவணங்களின் அடிப்படையிலும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (நவ. 4) இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு பண்ணாட்டு பள்ளி, மற்றும் அவர் தொடர்புடைய 20 இடங்களில் வருமானவரி துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல். கரூரிலும் அமைச்சருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் நாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : கனமழை எதிரொலி : சென்னை, சிவகங்கை, நெல்லை, குமரி, தேனி என தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!