சென்னை மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவழிகின்றன.
அதனைத் தொடர்ந்து சாதாரண நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ளவர்களை சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட 12 பரிசோதனை மையங்கள், தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கின்றனர்.
கரோனா தொற்றுக்கு உரிய அறிகுறி உள்ளவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகள், தனியார் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்துகொள்கின்றனர். அவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியான பின்னர், பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சி வாகனம் அல்லது அவர்களின் சொந்த வாகனம், ஆட்டோக்கள், பேருந்துகளிலும் மையங்களுக்கு வருகின்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில், சிலர் வெளியில் சென்றுவருகின்றனர். இதனால் மற்றவர்களுக்குத் தொற்று எளிதில் பரவிவிடுகிறது. மாநகராட்சியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுத்த பின்னர் பல மணி நேரம் கழித்த பின்னர் பரிசோதனை முடிவுகள் வருகின்றன.
இதனால் அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்றினைப் பரப்பிவிடுகின்றனர். மேலும் வரும் வழியில் உள்ள நபர்களுக்கும் தொற்று நோயைப் பரப்பிவருகின்றனர்.
ஆட்டோவில் வரும் நோயாளிகள் தங்களுக்கு கரோனா தொற்று உள்ளது எனக் கூறாமல் வருவதால் அந்த ஆட்டோ ஓட்டுநரும் கரோனா நோயாளியாக மாறும் அவலநிலை உள்ளது. கரோனா நோயாளிகள் பரிசோதனை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முழு கவச பாதுகாப்பு உடையும் மாநகராட்சியில் அளிக்கப்படாத நிலையில் உள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையரிடம் கேட்டபோது, "சென்னை மாநகராட்சியின் மூலம் பரிசோதனை செய்பவர்களை நாங்கள் கண்டறிந்த அழைத்துச் செல்கிறோம்.
மேலும் சில தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்து அந்த முடிவினை எடுத்துக்கொண்டு அவர்கள் சொந்த வாகனங்களில் பரிசோதனை மையங்களுக்கு வருகின்றனர். இங்கு வருபவர்களைப் பரிசோதனை செய்து நோயின் தீவிரத்திற்கு ஏற்ப அவர்களைத் தனிமைப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.