பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மாா்ச் 22ஆம் தேதிவரை வெளிநாடுகளிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணிகளின் விவரப்பட்டியலை தயாரிக்கும் பணியில் குடியுரிமை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். உலகை உலுக்கும் கரோனா வைரஸ் 2019 டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவத்தொடங்கியது. அதனால் ஜனவரி 15ஆம் தேதி முதல் அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு விமானநிலையங்களிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதையடுத்து ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்தில் மத்திய, மாநில சுகாதாரத்துறையினா் மருத்துவப் பரிசோதனையை தொடங்கினா். சீனாவிலிருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லாததால், ஹாங்காங்கிலிருந்து சென்னை வரும் கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் விமான பயணிகளை மட்டும் சோதனையிட்டனா். அதையடுத்து ஹாங்காங், மலேசியா, சிங்கபூா், இந்தோனேசியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் விமான பயணிகளையும் சோதனையிட்டனா்.
பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து தாய்லாந்து, குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனையைத் தொடங்கினர். அதன்பின் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதிவரை வந்த பயணிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும்.
அவர்களில் கரோனா அறிகுறி உடையவர்கள் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். எனவே இதிலிருந்து மீதம் உள்ள லட்சக்கணக்கானோர் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் வெளியில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்படி மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படாமலிருப்பவர்களை கண்டுபிடிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதனால், மத்திய சுகாதாரத்துறை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்களிடம், பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்தவா்களின் விவரங்களைக் கேட்டுள்ளது.
அதன்படி, பயணிகளின் விவரப்பட்டியலைத் தயாரிக்கும் பணியில் குடியுரிமை அலுவலர்கள் இரண்டு நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். விவரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதில் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் அளிக்கப்படும். அதன்பின் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதையும் படிங்க: 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.5000 வழங்க வேண்டும்'