“காமராஜர், கக்கனை போல் நேர்மையாக இருந்து சாதி மத பாகுபாடின்றி தமிழ்நாட்டில் ஊழலை ஒழித்து நேர்மையாக பாடுபட வேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன்”
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஜே.பி.பேரடைஸ் மைதானத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற நிகழ்ச்சியில் சகாயம் பேசிய வார்த்தைகள் மேற்கூறியவை.
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரஜினி மீது இருந்த எதிர்ப்பு போலவே ஓரளவு சகாயம் மீதும் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அவர் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அரசியலுக்கு வருவதற்காகத்தான் சகாயம் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்த சூழலில் அவர் அமைதியாகவே இருந்தார்.
சகாயம் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துவிட்ட நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை எந்தக் கட்சியுடனாவது கூட்டணி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனது முதல் நோக்கமும், முழக்கமும் ஊழற்ற சமூகத்தை அமைப்பதுதான் என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். அதேபோல்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கிறது. எனவே கமலுடன் சகாயம் கை கோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மேலும், சகாயம் மேல் தமிழ் தேசியவாதி என்ற பிம்பமும் இருப்பதால் அவர் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புகள் உருவாகலாம். அதேசமயம், இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தே களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் இந்தத் தேர்தலிலும் அதே முடிவை எடுக்கும்பட்சத்தில் சகாயத்துடன் கமல் மட்டுமே கை கோர்க்கும் நிலை உருவாகும்.
ஆனால், சகாயம் மீது இருக்கும் நேர்மையானவர் என்ற பிம்பத்தால் சீமான் அவருக்கு கை கொடுக்கலாம். இருப்பினும், முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தன்னுடைய பலம் என்னவென்று சகாயத்திற்கு தெரியாமல் போகலாம்.
அதனால் அவர், வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனக்கான வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துகொள்ளவே ஆசைப்படுவார் என்றே கணிக்கப்படுகிறது. இருப்பினும், முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தால் தன்னுடன் இருப்பவர்களுக்கும், தனக்கும் பெரும் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் அவர் மநீம அல்லது நாம் தமிழர் கட்சியிடனோ இல்லை இரண்டு கட்சிகளுடனோ கூட்டணி அமைக்கலாம்.
ஒருவேளை கமல், சகாயம், சீமான் உள்ளிட்டோர் இணைந்து தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாக்கினால், சென்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியை போல் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது அணி உருவானால் அதன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழும்.
தேமுதிக தற்காலத்தில் ஓரங்கட்டப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கடந்த தேர்தலில் அக்கட்சி மக்கள் நல கூட்டணிக்குள் சென்றதுதான் என பலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். எனவே மூன்றாவது அணி அமைந்தால் அதில் சகாயத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் யோசிக்கின்றனர்.
சகாயம் அரசியலுக்கு வருவதையும் அதற்கான நோக்கத்தையும் அவர் உறுதி செய்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் நேர்மை என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாத நிலை இருக்கிறது. அரசாங்கப் பணியில் எதற்காகவும் யாருக்காகவும் வளைந்து போகாதவர் அரசியலில் அப்படி இருக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.
மக்களை சந்திக்க ஆவலும், அவர்களின் சிந்தனையை கட்டிப்போடும் வித்தையும், எதிர்க்கட்சிக்காரர்களின் தாக்குதலையும் சமாளிக்க சகாயத்திற்கு மிகப்பெரிய பொறுமை வேண்டும். முக்கியமாக திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக தனித்துதான் போட்டியிடுவேன் என்று அவர் களமிறங்கினால், கடைசி வரை போட்டியிட்டுக்கொண்டே மட்டும்தான் இருக்க முடியும்.
ஆகமொத்தம், அரசியலுக்கு வந்திருக்கும் சகாயம் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்துப் போட்டியிடுவாரா என்று தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாக கூறும்போது தெரியவரும். எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியலுக்கு அவரது நேர்மையும் மட்டுமே போதாது என்பது நிச்சயம். எனவே அந்த நேர்மையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை அவர் உருவாக்குவது சாத்தியமா என்பது சந்தேகம்.