அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீம்புக்கும் அரசியல் ஆட்டத்துக்கும், மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்காக மக்களின் வரிப்பணம் ரூ.3.5 கோடி வீணாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 முறை பதவி வகித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் மறைவிற்குப் பின்பு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்தவர் இவர். இவர் கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார்.
ஜெ மரணத்தில் சந்தேகம்: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஜெயலலிதா மறைந்த தினத்தன்று இரவே தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.
நீண்ட நாட்களாக அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், டிசம்பர் 31ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். சசிகலாவே முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ்: பிப்ரவரி 5ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அன்றைய தினமே சசிகலா, சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் 21-ஆவது முதலமைச்சராக பதவி ஏற்கவும் தயாராக இருந்தார்.
தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ்: பிப்ரவரி 7ஆம் தேதி இரவில், ஓ பன்னீர்செல்வம் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலிதாவின் நினைவிடத்திற்கு வந்தார். 40 நிமிடங்களாக தியானத்தில் இருந்த அவர் கண்கள் கலங்கியபடி எழுந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசியவர், ” என்னைக் கட்டாயப்படுத்தியதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்..!” என்று கண்ணீர் மல்க கூறினார்.
மேலும், மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். தனிமனிதனாக நின்று போராடுவேன், தகுதியுள்ளவர் தமிழகத்தை ஆள வேண்டும், தனது தர்ம யுத்தம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
கூவத்தூரில் முதல்வர் தேர்வு : சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தால், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார் என சசிகலா தெரிவித்தார்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு: எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுடன் உட்பகை தோன்றியது. ஏற்கனவே சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர், அதிமுகவை இரு குழுக்களாக பிரித்தனர். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அணியினர், பழனிசாமி அணியுடன் சேர்ந்து கொண்டு, கடந்த 2017 செப்டம்பர் 12 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியை பறித்ததோடு , அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் : ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள். அதன்படி கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணை தாமதம்: கடந்த 2020, ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 2021 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதன் காரணமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தள்ளிப்போனது.
ஆணையத்தில் ஆஜரான ஓபிஎஸ்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இரண்டு நாட்கள் ஆஜரானார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
சந்தேகம் இல்லை: ஜெயலலிதா மரணத்தில் தனக்குத் தனிப்பட்ட சந்தேகம் இல்லை எனவும் சசிகலா மீது உள்ள குற்றச்சாட்டுகளை களையவே ஆணையம் அமைக்க தெரிவித்தேன் என்றும் சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை உள்ளது எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை மீது முழு திருப்தி, ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி: ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களுக்கு இருக்கும் சந்தேகத்தினை தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று கூறிவரும் நிலையில், மிகப்பெரிய டைனமிக் லீடர் என்பதால் அவரது மரணம் குறித்து மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வண்ணம் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வரும் நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
ரூ 3.5 கோடி இழப்பு: தன்னுடைய முதலமைச்சர் பதவியை பறித்த சசிகலாவை, குற்றம் சுமத்தி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, தர்மயுத்தம் நடத்தி, ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆணையத்தின் விசாரணையின் போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் சசிகலா மீது உள்ள குற்றச்சாட்டை களையவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் சசிகலா மீது அவருக்கு தனி மரியாதை உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்தது, பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நபருக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக 160 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு, ரூ.3.5 கோடி செலவு செய்து இருக்கிறது. மேலும், தற்போது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது. மேலும், வருகிற ஜூன் மாதத்தில் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ்-ன் வீம்புக்கும் அரசியல் ஆட்டத்துக்கும் ஆறுமுகசாமி ஆணையமா? என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மக்கள் வரிப்பணம் வீண் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டினார். ஓபிஎஸ் நிதானமானவர் எல்லா முடிவுகளையும் யோசித்து தான் எடுப்பார் என்று கூறிய டிடிவி தினகரன், அரசியல் காரணங்களுக்காக சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஜெ. ஜெயலிலதா உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார் என்பதுதான் உண்மை என்றும் கூறினார்.